”பாவத்தின் சம்பளம் மரணம்” இது பைபிளில் கூறப்பட்டுள்ள ஒரு வசனம். மரணம் என்பது பாவத்தின் சம்பளமா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். பைபிளின்படி மறுபிறப்பு கிடையாது. எனவே பிறந்த ஒரு குழந்தை சில நாட்களில் இறந்து விட்டால் அந்தக் குழந்தை பாவத்தின் காரணமாக இறந்ததா? அந்தக் குழந்தை ஞானஸ்நானம் பெற்றிருக்காவிட்டால் சொர்க்கத்திற்கு செல்லுமா? நரகத்திற்கு செல்லுமா? இதற்கு கர்த்தரின் விசுவாசிகள் யாராவது விளக்கம் தருவார்களா?
இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மா சட்டையைக் களைவதைப் போல் உடலைக் களைந்து விட்டு வேறு பிறப்பெடுக்கிறது. நல்வினைகளுக்கு நன்மையையும் தீவினைகளுக்கு துன்பங்களையும் உலக வாழ்வில் அனுபவிக்கிறது. ஆனால் மறுபிறப்பு இல்லாமல் இருக்கும்போது ஒருவர் செய்கின்ற நல்லவை மற்றும் கெட்டவைகளுக்கு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு கர்த்தர் அனுப்புவார் என்றால் (கிறிஸ்தவராக இருந்தால் சொர்க்கம். மற்ற மதத்தவர்களுக்கு என்னதான் நன்மை செய்திருந்தாலும் நரகம்) அது நியாயமான செயலா?
மரணத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டவர்கள் பலர் உண்டு. குருகோவிந்த சிம்மனின் இரு மகன்களையும் உயிருடன் கல்லறை கட்டும்போது மதம் மாறிவிட்டால் விட்டு விடுகிறேன் என்று பிழைக்க வாய்ப்பு கொடுத்த போதும் மறுத்து மகிழ்வுடன் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர். எத்தனையோ மகான்கள் தங்கள் இறுதி காலம் வருவதை அறிந்து தாங்களாகவே சமாதிக்குள் சென்று ஜீவசமாதி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் வாழ்ந்த சங்கரசாமிகள் என்ற மகானைப் பிடிக்காத சிலர் அவரைக் கொலை செய்யும் பொருட்டு அவர் படுத்திருந்த கடற்கரைக்குச் சென்றனர். அப்போது அவர் நான்கு நபர்களாக காட்சி தந்தார். படுத்துக்கொண்டு இருக்கும் நான்கு நபர்களில் யார் உண்மையானவர்? எவரைக் கொலை செய்வது என்று திகைத்து ஓடிவிட்டனர். வல்லநாட்டில் மிகச் சமீப காலத்தில் வாழ்ந்தவர் சாது சிதம்பர சுவாமிகள். அவரது சமாதி வல்லநாடு பாறைக்காட்டில் உள்ளது. மாதந்தோறும் புச நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடைபெறும். அவருடைய ஆசிரமத்தில் புதநாதன் என்ற அன்பர் தங்கியிருந்த போது நடு இரவில் விழிப்பு வந்து சாமியை பார்த்திருக்கிறார். சுவாமியின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டது போல் கிடந்திருக்கிறது. பதறிப்போய் சுவாமியின் துணைவியாரை எழுப்பி சுவாமியைப் பார்க்க வாருங்கள் என்று அழைத்திருக்கிறார். அம்மையார் வந்து பார்த்தபோது சுவாமி சாதாரணமாக தூங்கிய நிலையில் காட்சி தந்திருக்கிறார். இவை சில உதாரணங்களுக்கு
ஆனால் இயேசுவோ தன்னை சிலுவையில் அறையும்போது கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறி அழுகிறார். மூன்று நாளில் உயிர்த்தெழப் போகிறவர் மரணத்தைக் கண்டு ஏன் கதறவேண்டும். அதுவும் 2015ஆம் ஆண்டில் வாழும் மக்களுக்காக தம்மையே பாவபலியாக ஒப்புக் கொடுத்தாராம். நம்பும்படியாகவா இருக்கிறது. இறப்பிற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையிலான காலத்தில் எங்கிருந்தார். என்ன செய்தார் என்று யாராவது விளக்குவார்களா? பாவத்தின் சம்பளம் மரணம். இந்த வார்த்தை எப்போது உண்மையாகிறது என்றால் விபத்திலோ கொலை செய்யப்பட்டோ துன்பப்பட்டு துர்மரணம் அடையும்போது. நல்லவர்களுக்கு தூங்கியபின் சில விநாடிகளில் உயிர் பிரிந்து விடும். ஆனால் சிறிது சிறிதாக சித்திரவதை செய்யப்பட்டு உயிர் உடலைவிட்டு பிரிகின்ற மரணம் தான் பாவத்தின் சம்பளம். இயேசுவின் மரணமும் இதில்தான் அடக்கம். அதனால்தான் அவர் கதறி அழுதிருக்கிறார்
No comments:
Post a Comment